Showing posts with label பாலு மகேந்திரா. Show all posts
Showing posts with label பாலு மகேந்திரா. Show all posts

Friday, March 14, 2014

நகர மறுக்கும் நினைவுகள் - 7 - கனவு காணும் வாழ்க்கையாவும்..

படம் : நீங்கள் கேட்டவை

கண்கள் அற்றவனின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயத்தின் ஒலிகளாய், மரணமும் மயானம் நோக்கி நகர்தலில் துவங்குகிறது பாடல்.

எதிர் எதிர் நிகழ்வுகளை ஒன்று படுத்தி காட்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாலு சார்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

மனிதனின் அழுகை பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் பிணம் எரிகிறது. நாய்கள் தனது தாயிடம் பால் அருந்துகின்றன.

மயானத்திலிந்து மனிதன் நடந்து வருகிறான்.சிறிய குழந்தை தனது கண்களை உருட்டிப் பார்க்கிறது. அடுத்த காட்சியில் கல்லறைகள்.

பிறக்கின்ற  போதே, பிறக்கின்ற  போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே

பாடுபவன் பாடிக் கொண்டே நடந்து வருகிறான். லாட்டரி சீட்டு வியாபாரம் நடக்கிறது. காமம் அரங்கேற்றம் கொள்கிறது.

ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே

அசைவுகள் அற்று வயதானவன் படுத்திருக்கிறான்.

உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...

மிகப் பெரிய மனித கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா விளம்பரப் பலகைகள். படத்தின் பெயர் ஊமை ஜனங்கள். மீண்டும் மெல்லிய சூரிய கதிர்கள் வானில் இருந்து பிரகாசிக்கின்றன. காற்று வேகமாக அடிக்கிறது. நீர் நிலைகளில் நீர் கடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீர் நிலைகளும் பிறகு நீர் அற்றதால் வெடிப்புற்ற நிலங்களும் காட்சிகளில்.

காலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்.
சிறிய குழந்தை அழும் காட்சியும், வயதான மூதாட்டியின் நிலை பெற்ற பார்வையும். கடற்கரையினில் காதலர்களும் அதைத் தொடந்து வயதானவனின் நிலை பெற்ற பார்வையும்.

தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்.

வாகனத்திற்கு வெளியே காலகளை நீட்டி ஒருவன் உறங்குகிறான். குழுக்களாய் மனிதர்கள் ஏதோ ஒன்றைத் தேடுபவர்களாய்.

நட்சத்திர ஒட்டலும் பின்பு உழைப்பாளர் சிலையும். பாடல் தொடர்கிறது.

பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்  தானே ஆனந்தம்

இசைத்துக் கொண்டே பாடுபவன் அமர்ந்திருக்கிறான்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

உறுத்தாத கணவன் மனைவி உறவாய் பாடலும் இசையும் மிக சரியான விகிதத்தில்.

முள்ளை முள்ளாய் எடுப்பது போல், மிக அதிக மனப் பாரங்கள் இருக்கும் காலங்களில் தனித்து இப்பாடலை கேட்கும் போது இப்பாடல் வலிகளை மருந்தாய் இட்டுச் செல்கிறது.

அருவி நம் உடலை தூய்மை செய்வது போல் பாடல் வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம் மனப் பாரங்களை நீக்குகின்றன.


நிலையாமைத் தத்துவங்களின் மிக முக்கிய பணி தன்னை உணர்தல், தன் வலி உணர்தல். அதை இப்பாடல் மிக சிறப்பாகவே செய்கிறது. அதனால் தான் இன்னும் கனவு காணும் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.

Thursday, November 14, 2013

என் இனிய பொன் நிலாவே...

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா - பொது அம்சம் - இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ' உங்களுக்கு பாட வருமா?'
'கொஞ்சமா' பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

'இரட்டுற மொழிதல்' என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.