இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).
நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் 'மாக்கான்'.
அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.
எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.
இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.'அம்மா சோறு போடுங்க' இதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.
இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். 'அம்மா சோறு போடுங்க'. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.
சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.
இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.
நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன்.
ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.
புகைப்படம் : R.s.s.K Clicks
No comments:
Post a Comment