Saturday, November 30, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

சமீபத்தில் நான் படித்த என்னை பாதித்த விஷயம்.

வெளி நாட்டில் வாழும் ஒரு குழந்தையை சுமக்கும் ஒரு தாய்க்கு, அது செயல் அற்று விட்டதாத மருத்துவ முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தாய் மிகவும் கவலையுடன் இருந்திருக்கிறாள்.

அந்த நேரத்தில் இசைஞானி இசையை கேட்க நேரிடுகிறது. மிகக் குறுகிய காலத்துக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தை அசைய ஆரம்பிக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு கணவன், குழந்தை அனைவருடன் வந்து இசைஞானியிடம் ஆசி பெற்று சென்றதாக செய்தி.

Wednesday, November 27, 2013

நடத்தலும் பறத்தலும்

காலையில் இருந்து பரபரப்பு இருவருக்கும்(மனைவிக்கும் எனக்கும்) தொற்றிக் கொண்டது.

'ஏங்க அவனை கொஞ்சம் எழுப்புங்க'

'இன்னும் 10 நிமிஷம் தூங்கட்டும்'

'இன்னைக்கு தான் 2 மாசத்துக்கு பிறகு ஸ்கூல் தொரக்குது. 2 மாசமா தூங்கி தூங்கி காலைல எழுந்திருக்கி மாட்டான் இதுல பூஸ்ட் குடிச்சி காலைல சாப்பிடனும் வேற.

'இரு எழுப்புறேன்'

'எனக்கு என்னவோ கவலையா இருக்குங்க, அவன் அவ்வளவு சீக்கிரமா

எழுந்திரிக்கமாட்டான்'

'இரு எழுப்புறேன்'

'இருங்க, அடுப்புல கொஞ்சம் வென்னீர் போடுங்க, யூனிபார்ம் எடுத்து வைச்சிருக்குறேன். அத கொஞ்சம் அயன் பண்ணுங்க, ஷூவ எடுத்து வைங்க, சாக்ஸ் நல்லா இருக்கா பாருங்க ஸ்கூல் ரெசிப்ட் எடுத்து வச்சிருங்க, கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ஊத்தி வச்சிருங்க, ஸ்னக்ஸ் ஏதாவது இந்த டப்பால எடுத்து வச்சிருங்க'

எனக்கு தலை சுற்றியது.

'எனக்கு ஒரே டென்ஷான இருக்குங்க, அவன் எப்படி கிளம்புவான்னு'

'கவலப் படாத, நான் எழுப்புறேன்'

'யேய், தம்பி எழுந்திரிடா'

சிறிய பால்பாயின்ட் பேனாவை கழட்டும் போது வெளியே விழும் ஸ்பிங் போல் கட்டிலில் இருந்து எழுந்தான்.

'ஏன்டா'

'இன்னைக்கு ஸ்கூல் தொறக்குதுல்ல, என் ப்ரெண்ஸ் எல்லாரையும் பாக்குணும் இல்ல அதான்'

வாழ்க்கை வழி எங்கும் விசித்திரங்களை விதைத்துச் செல்கிறது. விடை எழுதும் முன்னே வாசித்தல் விசித்திரமே.

Click by : Karthik Pasupathy

Sunday, November 17, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).


சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.

சங்கீதா: நீங்க ஏன் இப்ப இளையராஜாவோடு சேர்வதில்லை.

பாலா : இன்னைக்கு இருக்கிற எல்லா இசையிலும் ராஜா இருக்கிறார். அவரில் சாயல் அற்ற தனிப்பாடல் எதுவும் இல்லை. அதனால அவரை அவர் இசையை தனியா பார்க்கவில்லை.

Friday, November 15, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.

இசைஞானி : கதய சொல்லு.

பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.

இசைஞானி : படம் ஓடாதுடா.

பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இசைஞானி :  அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.

இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.

படம் : முதல் மரியாதை.

Thursday, November 14, 2013

என் இனிய பொன் நிலாவே...

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா - பொது அம்சம் - இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ' உங்களுக்கு பாட வருமா?'
'கொஞ்சமா' பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

'இரட்டுற மொழிதல்' என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.

Wednesday, November 6, 2013

வியாபாரம்

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.

ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.

ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.

'ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல'

'ஆமாம் தம்பி'.

'எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்'

'இதுல 70ரூவா இருக்கு தம்பி'

'நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்'

'வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க'

'ஆமாம்'

'நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க'

குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.

Click by : RamaSwamy N

Sunday, November 3, 2013

மினி பேருந்தும் மினி பயணமும்

ராமாபுரம் மெயின் ரோட்டில் ஒரு மினி பேருந்து

கிடுகிடு வென 30 பேர் பஸ்ஸில் ஏறினர்.

எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

'ஏண்டா, இப்ப மினி பஸ், அப்புறம் 17G, அப்புறம் திரும்பவும் மினி பஸ். அப்புறம் நம்ப பொழப்பு எப்படி ஓடும்'. ஆட்டோ காரர்களின்  மன வெளிப்பாடுகள்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
'எங்க போவணும்'
'அரச மரத்தடி'
'கல்லூரி சாலை ஒன்னு கொடுங்க'
'அது எங்க இருக்கு'
'ஏங்க, என்னங்க கண்டக்டர் நீங்க, நிறுத்தம் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியனும்'.
'சார் நான் புதுசு சார்'

பஸ் சுட்டுகாட்டுக்கு அருகில் ஸ்டேஜிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

'சார் டிக்கட் வாங்கறவங்கலெம் சீக்கிரம் வாங்குங்க'
பஸ் மைக்கேல் கார்டன் அருகில் வந்திருந்தது.
'புள்ளயார் கோயில் நிக்குமா சார்'
'ரெண்டு வீட்டுக்கு ஒரு வீடு நிக்கும்'

'என்ன சார் செய்யறது, இது தான் பொழப்பு, ஆளாளுக்கு வீட்டுக்கு வீடு நிறுத்த சொல்றாங்க. ஆனா எங்களுக்கு 32 டிரிப்பு அடிக்கணும் சார். இன்னைக்கு இது தான் 18வது டிரிப்பு. அதிக பட்சம் 22 அல்லது 23 தான் முடியும். என்னா, கொஞ்சம் திட்டுவாங்க, வாங்கிக்க வேண்டியது தான்.

டிரிப் ஷீட்டில் 32 என்று எழுதி வட்டம் இடப் பட்டிருந்தது.

பயணம் சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனாலும் பயணம் மட்டும் தொடர்கிறது.