சொந்த ஊர் பற்றி நினைத்தாலே சுகம் எனில் அதைப்பற்றி எழுத வேண்டும் எனில்...
மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு பெருமை மாயூரத்திற்கு உண்டு. அது 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா' என்பதே. இது மாயூர மனிதர்களுக்கே உண்டான கர்வம். காவேரி தண்ணீர், கும்ப கோணம் வெத்திலை, புகையிலை மற்றும் மிகச் சிறந்த அக்கப்போர்கள்
அப்போது
எனக்கு சிறுவயது.(இப்போது மட்டும் என்ன. இப்போதும் அப்படித்தான்)
தாத்தா ஸ்ரீராம் சைக்கிள் கம்பெனியில் கணக்குபிள்ளையாக
வேலை பார்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு மாலை டிபன் உண்ணும் பழக்கம் உண்டு.
தாத்தாவுக்கு மயூரா லாட்ஜில் கணக்கு உண்டு. தினமும் சாப்பிட்டு விட்டு அவரே தனது நோட்டில் எழுதி விடுவார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு செட்டில் ஆகி விடும்.
அப்போது
மணிகூண்டு
பக்கத்தில் வரும் போது சாம்பார் வாசனை வரும்.(சுமார் 200 மீட்டர் தூரம்). 'பெரும் வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது' என்று பலகை வேறு
இன்னைக்கு
சாயங்காலம் பூரி சாப்பிட்டேன். நல்லா இருந்துது. நாளைக்கு உன்னையும் அழச்சிகிட்டு போரேன். இதழ்கள் புன்னகைக்கும்.
தும்பைப்
பூவினைப்
போன்ற ஒரு புன் சிரிப்பு. அப்பா எத்தனை பளீர்
ஆயி (தற்போது வழக்கு ஒழிந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான சொல் - அம்மா என்ற பதத்தில் வரும் பாட்டி)
ஆயி : உங்களுக்கு இதே வேல, புள்ளைகள் கிட்ட இத வந்து சொல்லிகிட்டு.
யாரும் அற்ற ஒரு மதிய வேளையில் தாத்தா இறந்து போனார்கள்.
அவருக்குப் பின் அவருடைய பெட்டியினை(எத்தனை பொக்கிஷம்) திறந்தோம். ஒரு சில பேப்பர்கள், சில பேனாக்கள் இத்யாதிகள். கூடவே மயூரா லாட்ஜ் கணக்கு பேப்பர்.
அன்றைய தேதியில் ரூ 80 பாக்கி இருந்தது.
ஒரு மாலைப் பொழுதின் பின்
பொழுதினில் நானும் எனது தந்தையும் மயூரா லாட்ஜ் சென்றோம்.
கல்லாவில்
ஒரு அழகாக ஒரு மனிதர். வெள்ளை சட்டை, விபூதி மற்றும் குங்குமம்.( அப்பா எத்தனை அழகு)
முதலாளி:
என்ன வேணும்?
அப்பா
: நான் தங்கவேல் பையன். அப்பா தவறிட்டாங்க. அவங்க கணக்கு எழுதி வைத்திருந்தார்கள். ரூ 80 பாக்கி இருக்கிறது. அத குடுக்க வந்தோம்.
தீர்க்கமான ஒரு பார்வை. வினாடி மௌனம்.
முதலாளி: அவர் எனது நீண்ட கால வாடிக்கையாளர். அதோட மட்டும் இல்ல அவர் எனது நண்பரும் கூட. மீக நீண்ட நாள் பழக்கம் உண்டு. இன்னைக்கு வரைக்கும் அவர் கணக்கில் தவறே வந்தது இல்லை. அந்த நல்ல மனிதருக்காக நானே அந்த செலவை ஏத்துக்கிறேன். நீங்க கொடுக்க வேண்டாம்.
உண்ட பிறகு வீசி எறியும் உணவுப் பண்டங்களின் உறைகளில் சில உணவுத் துகள்கள் ஒட்டியிருக்கும். அப்படித்தான் காலம் வீசி எறிந்த நிகழ்வுகளில் இன்னும் நினைவுகள் ஒட்டி இருக்கின்றன.
புகைப்பட உதவி : Mahendiran Thiru