Friday, June 20, 2014

ஜகத்பதி


நேற்று காலை

நகரின் பிரதான இடம் அது. தொகுப்பு வீடுகளும் தனி வீடுகளும் அமைந்திருக்கும் பகுதி.

பிளாட்பாரம் வழியாக பயணம்
பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.

'மனுஷனா இல்ல மாடா இவனுக, இப்படி இருந்தா எப்படி  நடக்கறவன் நடப்பான்'.

நேற்று மாலை
அந்தி சாயும் பொழுதுவாகனத்தில் பயணம்

கண் அற்றவன் ஒருவன் குச்சியை வைத்து நடந்து கொண்டிருந்தான்.
'சார், சார் - பார்த்து போங்க, இடிச்சிக்காதிங்க'
ரொம்ப நன்றி சார்'
உங்க பேரு என்னாங்க?
ஜகத்பதி
அது என்னாங்க அப்படி ஒரு பேரு
வடக்குத்தி சாமிங்க. நான் காசி போயிருந்தப்ப அங்க இருந்தவங்க எல்லாம் சொன்னாங்க. அதாலெ எம் பேர அப்படி மாத்திக்கிட்டேன். அதாவது உலகத்திற்கு அதிபதியாம்.

'உட்காருங்க சார், நீங்க எங்க போவணும்ணு சொல்லுங்க இறக்கி விடறேன்',
தனக்கான நாளின் முடிவில் ஜகத்பதி.அப்போது மணி மாலை 6.30

'எங்கியாவது இறக்கி விடுங்க சார், நான் தூங்கனும்', ஜகத்பதி
'எத்தனை நாளா இந்த பென்சில் பேனா, ரேஷன் காடு விக்கிறீங்க',

'எனக்கு கண்ணு தெரியாம போனதில் இருந்து', ஜகத்பதி
'என்ன ஆச்சு உங்களுக்கு', அவன்

'உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட போனேன். அவரு ஊசி போட்டார். அப்புறமா கொஞ்ச நால்ல ருந்து கண்ணு தெரியல', ஜகத்பதி

'உங்களுக்கு சொந்த ஊர் எது',
'குன்னூர் பக்கங்க', ஜகத்பதி

'இங்க எப்படி வந்தீங்க',
'ரயில்ல தான். நான் எம். இங்கிலிஷ் லிட்ரச்சர் படிச்சிருக்கிறேங்க', ஜகத்பதி. வார்த்தைகளில் நிதானமான கத்தி சொருகல்.

'ஏன் நீங்க வேலைக்கு போகலையா', அவன்
'சர்டிபிகேட் எல்லாம் பஸ்ல தொலைஞ்சு போச்சுங்க', ஜகத்பதி. கத்தி இன்னும் எடுக்கப்படாமல் ரத்தம்.

'சாப்பிடீங்களா'
'டீயும் பன்னும் சாப்டேன்' - ஜகத்பதி.

'சார் ராத்திரி சாப்பாடு பத்தி கேட்டேன்'
'அதெல்லாம் சாப்டா ராத்திரி வயத்தை கலக்கும் சார்'- ஜகத்பதி. மெல்லிய இளம் சூடான மைசூர் பாகினை தட்டினில் கொட்டி, கத்தியால் நறுவிசாக நறுக்கப்பட்டதைப் போல் வார்த்தைகள்.

'காலையும் மதியமும்?'
'ஒரு நாளைக்கு 80ரூ வருமானம் வரும் சார். காலைக் கடனுக்கு 5ரூ சார். குளியலும் காலைக்கடனும் அப்படீன்னா 10ரூ சார். அதுல எப்படி எல்லா வேளையும் சாப்பிட முடியும்'  - ஜகத்பதி. வார்த்தைகளில் துப்பாக்கி சூடு குறிபார்த்து.

'இங்க எறங்கிங்க'
'ரொம்ப நன்றி சார்', ஜகத்பதி

இன்று காலை.
ஜகத்பதியை இறக்கி விட்ட இடத்தின் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.

புகைப்பட உதவி :  R.s.s.KClicks


No comments:

Post a Comment