Saturday, December 28, 2013

நேசங்களை மாற்றிய தேசம்

சற்று நேரம் கழித்து அலுவலகத்தில் நுழைந்தேன்.

'என்னா சார் லேட்?'

'நண்பர் போன் பண்ணார், யாருக்காவது ஒரு சாப்பாடு வாங்கி குடுக்கச் சொன்னார், அதான் கோயிலுக்கு எதித்தாப்பல ஒரு அம்மா இருந்திச்சி. அதுகிட்ட கொடுத்து வந்தேன். ஆனா என்ன வேடிக்கைன்னா அது பிச்சகாரி மாதிரியே தெரியல, ஹின்டு படிக்குது'

' அந்த டாக்டர் அம்மாவா'

எனக்கு தலை சுற்றியது.

'என்னங்க சொல்றீங்க'

'மேட்டர் தெரியாதா, அது 'GH'Professor'. இப்பவும் சீனியர் டாக்டர் எல்லாம் வந்து 'consultation'னு வராங்க. பசங்க எல்லாம் காச வாங்கி அத விரட்டி விட்டாங்க, அட போங்கடான்னு அந்த அம்மாவும் வெளில வந்திருச்சி . இப்ப மழை பெய்யுதுன்னு பெசன்ட் நகர் ''bus depot" படுத்துக்கிடக்குது.

காலம் கனக்கச் செய்யும் பொழுதுகளில்  கண்களிலும் ஈரம்.

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru


Saturday, November 30, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

சமீபத்தில் நான் படித்த என்னை பாதித்த விஷயம்.

வெளி நாட்டில் வாழும் ஒரு குழந்தையை சுமக்கும் ஒரு தாய்க்கு, அது செயல் அற்று விட்டதாத மருத்துவ முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தாய் மிகவும் கவலையுடன் இருந்திருக்கிறாள்.

அந்த நேரத்தில் இசைஞானி இசையை கேட்க நேரிடுகிறது. மிகக் குறுகிய காலத்துக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தை அசைய ஆரம்பிக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு கணவன், குழந்தை அனைவருடன் வந்து இசைஞானியிடம் ஆசி பெற்று சென்றதாக செய்தி.

Wednesday, November 27, 2013

நடத்தலும் பறத்தலும்

காலையில் இருந்து பரபரப்பு இருவருக்கும்(மனைவிக்கும் எனக்கும்) தொற்றிக் கொண்டது.

'ஏங்க அவனை கொஞ்சம் எழுப்புங்க'

'இன்னும் 10 நிமிஷம் தூங்கட்டும்'

'இன்னைக்கு தான் 2 மாசத்துக்கு பிறகு ஸ்கூல் தொரக்குது. 2 மாசமா தூங்கி தூங்கி காலைல எழுந்திருக்கி மாட்டான் இதுல பூஸ்ட் குடிச்சி காலைல சாப்பிடனும் வேற.

'இரு எழுப்புறேன்'

'எனக்கு என்னவோ கவலையா இருக்குங்க, அவன் அவ்வளவு சீக்கிரமா

எழுந்திரிக்கமாட்டான்'

'இரு எழுப்புறேன்'

'இருங்க, அடுப்புல கொஞ்சம் வென்னீர் போடுங்க, யூனிபார்ம் எடுத்து வைச்சிருக்குறேன். அத கொஞ்சம் அயன் பண்ணுங்க, ஷூவ எடுத்து வைங்க, சாக்ஸ் நல்லா இருக்கா பாருங்க ஸ்கூல் ரெசிப்ட் எடுத்து வச்சிருங்க, கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ஊத்தி வச்சிருங்க, ஸ்னக்ஸ் ஏதாவது இந்த டப்பால எடுத்து வச்சிருங்க'

எனக்கு தலை சுற்றியது.

'எனக்கு ஒரே டென்ஷான இருக்குங்க, அவன் எப்படி கிளம்புவான்னு'

'கவலப் படாத, நான் எழுப்புறேன்'

'யேய், தம்பி எழுந்திரிடா'

சிறிய பால்பாயின்ட் பேனாவை கழட்டும் போது வெளியே விழும் ஸ்பிங் போல் கட்டிலில் இருந்து எழுந்தான்.

'ஏன்டா'

'இன்னைக்கு ஸ்கூல் தொறக்குதுல்ல, என் ப்ரெண்ஸ் எல்லாரையும் பாக்குணும் இல்ல அதான்'

வாழ்க்கை வழி எங்கும் விசித்திரங்களை விதைத்துச் செல்கிறது. விடை எழுதும் முன்னே வாசித்தல் விசித்திரமே.

Click by : Karthik Pasupathy

Sunday, November 17, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).


சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.

சங்கீதா: நீங்க ஏன் இப்ப இளையராஜாவோடு சேர்வதில்லை.

பாலா : இன்னைக்கு இருக்கிற எல்லா இசையிலும் ராஜா இருக்கிறார். அவரில் சாயல் அற்ற தனிப்பாடல் எதுவும் இல்லை. அதனால அவரை அவர் இசையை தனியா பார்க்கவில்லை.

Friday, November 15, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.

இசைஞானி : கதய சொல்லு.

பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.

இசைஞானி : படம் ஓடாதுடா.

பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இசைஞானி :  அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.

இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.

படம் : முதல் மரியாதை.

Thursday, November 14, 2013

என் இனிய பொன் நிலாவே...

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா - பொது அம்சம் - இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ' உங்களுக்கு பாட வருமா?'
'கொஞ்சமா' பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

'இரட்டுற மொழிதல்' என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.

Wednesday, November 6, 2013

வியாபாரம்

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.

ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.

ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.

'ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல'

'ஆமாம் தம்பி'.

'எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்'

'இதுல 70ரூவா இருக்கு தம்பி'

'நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்'

'வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க'

'ஆமாம்'

'நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க'

குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.

Click by : RamaSwamy N

Sunday, November 3, 2013

மினி பேருந்தும் மினி பயணமும்

ராமாபுரம் மெயின் ரோட்டில் ஒரு மினி பேருந்து

கிடுகிடு வென 30 பேர் பஸ்ஸில் ஏறினர்.

எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

'ஏண்டா, இப்ப மினி பஸ், அப்புறம் 17G, அப்புறம் திரும்பவும் மினி பஸ். அப்புறம் நம்ப பொழப்பு எப்படி ஓடும்'. ஆட்டோ காரர்களின்  மன வெளிப்பாடுகள்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
'எங்க போவணும்'
'அரச மரத்தடி'
'கல்லூரி சாலை ஒன்னு கொடுங்க'
'அது எங்க இருக்கு'
'ஏங்க, என்னங்க கண்டக்டர் நீங்க, நிறுத்தம் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியனும்'.
'சார் நான் புதுசு சார்'

பஸ் சுட்டுகாட்டுக்கு அருகில் ஸ்டேஜிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

'சார் டிக்கட் வாங்கறவங்கலெம் சீக்கிரம் வாங்குங்க'
பஸ் மைக்கேல் கார்டன் அருகில் வந்திருந்தது.
'புள்ளயார் கோயில் நிக்குமா சார்'
'ரெண்டு வீட்டுக்கு ஒரு வீடு நிக்கும்'

'என்ன சார் செய்யறது, இது தான் பொழப்பு, ஆளாளுக்கு வீட்டுக்கு வீடு நிறுத்த சொல்றாங்க. ஆனா எங்களுக்கு 32 டிரிப்பு அடிக்கணும் சார். இன்னைக்கு இது தான் 18வது டிரிப்பு. அதிக பட்சம் 22 அல்லது 23 தான் முடியும். என்னா, கொஞ்சம் திட்டுவாங்க, வாங்கிக்க வேண்டியது தான்.

டிரிப் ஷீட்டில் 32 என்று எழுதி வட்டம் இடப் பட்டிருந்தது.

பயணம் சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனாலும் பயணம் மட்டும் தொடர்கிறது.

Friday, October 25, 2013

2038 - இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்


2038 - இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்
(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
மிகச் சிறந்த வலைப்பின்னல் மற்றும் அறிவுள்ள உணர்தல் கூடிய நுட்பம் சார்ந்தது.( intelligent sensing systems)
சார், இத வச்சி எம் புருசனுக்கு எப்ப அறிவு வரும்னு சொல்ல முடியுமா?
2.
சார், இது மிகச் சிறந்த அறிவான வலைப்பின்னல் வகையைச் சார்ந்த கைப்பேசி தான். ஆனா உங்க பொண்டாட்டி எவ்வளவு நேரத்தில துணி எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது சார்.
3.
என்னங்க நீங்க, சிறந்த வலைப்பின்னல் கூடியது அதால உதட்டால பேசறத எல்லாம் புரிஞ்சிக் முடியும்னு சொல்லி குடுத்தீங்க. ஆனா எம் புருசன் பேசற கெட்ட வார்தைகளை மட்டும் புரிஞ்சிக்க முடியல சார்.
4
மிகச் சிறந்த தொழில் நுட்ப வலைப்பின்னலுடன் கூடிய தானியங்கி கார்களை சென்னைக்கு டெமோவிற்கு அனுப்பியது தப்பா போச்சு.
ஏன்?
ஒரு அடி கூட நகரல. எல்லாம் பெயில் ஆயிடுச்சு.
5
சார் எங்களை மன்னிச்சுடுங்க, உங்க மனைவி எப்ப எல்லாம் கோவப்படுவாங்கன்னு நரம்பு சார்ந்த வலைப்பின்னல்ல ஏத்திட்டோம் சார். ஆனா, அதுக்கு மேல நினைவாற்றலை அதிக படுத்த முடியல சார்.
6
என்னாப்பா? போன வாரம் வாங்குன ரோபோ சரியா வேலை செய்யல?

அது ரிசஷன் பீரியட்ல செய்தது சார். அதனால 50 மில்லியன் வலைப் பின்னல்கள் சரியா வேலை செய்யாது சார்.

Monday, October 7, 2013

ஒரு பாதி கனவு நீயடி..

எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,

ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.

ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.

ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு  மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.

மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.

சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,

வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.

மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).

கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.

காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

Thursday, October 3, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

முதல் முறையாக 100 வயலின்கள் இசைக்கு பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில். அப்போது ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வாசித்து கொண்டிருந்தனர்.

அப்போது இசை ஞானி சொன்னார் 'ஏம்பா, அந்த 38வது வயலின் சரியா வாசிக்கல. அவரை சரியா வாசிக்கச் சொல்லுங்க' 

Tuesday, September 24, 2013

2038ல் - எரிபொருள்கள்

2038ல் - எரிபொருள்கள்

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
பெட்ரோல் விலை - இன்று காலை 11.00 மணி நிலவரம் - ரூ. 568/லி. அடுத்த விலை அறிவிப்பு 12.00 மணி செய்திகளில்.

2.
என்ன சார் எல்லா பெட்ரோல் பங்க்லேயும் கூட்டம் 2 கி.மிக்கு நிக்குது.
உங்களுக்கு தெரியாதா, பெட்ரோல் விலை அடுத்த அரை அவர்ல 0.13 காசு குறையப் போகுது.

3.
என்ன சார் பேப்பர்ல விசேசம்.
25 லி. பெட்ரோல் போட்டா 0.100கி வெங்காயம் இலவசமாம்.

4.
பேங்க் வாசலில்
பெட்ரோல் அடகு வைக்க எங்கள் கிளைகளை அணுகவும். 1லி. 511/- ரூ.

5.
அரசியல்வாதிகள் - மற்றவர்கள் கூறுவது போல் எங்களிடம் நேற்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சும் இல்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைப் போக்க இன்று முதல் எரிபொருள் விலை ரூ.25 ஏறுகிறது.

Monday, September 23, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

எனது நண்பர் ஒரு படத் தயாரிப்பாளர்.

ஒரு முறை எனது நண்பர் ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒலி எஞ்ஜினியர் இளைய ராஜா ஒரு பாடலை முடித்து விட்டு மிகவும் சந்தோஷமாக சென்றதாக கூறியிருக்கிறார்.

எனது நண்பர் அப்பாடலை ஒலிக்கச் சொல்லி இருக்கிறார். கேட்டவுடன் எனது நண்பரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

அப்பாடல் - என்னைத் தாலாட்ட வருவாளா...

Thursday, September 19, 2013

தொடரும் நினைவுகளும் பாடலும்

ஆகாய கங்கை - இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.

படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை  மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).

மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.

ஆண் :  துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் :  தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.

ஆண்        :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
                    மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

பெண்       :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
                    தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.

மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.

பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு

பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து  இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.

Wednesday, September 11, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

ஒரு முறை இசைஞானி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஒரு இசையை கேட்க நேர்ந்தது. அந்த வாத்தியத்தை பற்றியும், அதை வாசிக்கும் கலைஞரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவரை சந்தித்து சென்னை வரும் போது தன்னை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த கலைஞர் சென்னை வந்த போது 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அந்த கருவியை 15 நாட்களில் வாசிக்கும் திறமையை பெற்றார்.

அந்த கருவியை வாசிக்க முழுமையாக 2 ஆண்டுகள்  ஆகும்.

Sunday, August 25, 2013

மோட்டார் வாகனம் - சில குறிப்புகள்.

1.எரிபொருளை பாதி அளவில் நிரப்புங்கள். (50ரூ, 100 ரூ என நிரப்ப வேண்டாம்.)
Please fill fuel at least half tank. (Do not fill for Rs. 50 or Rs.100)

2.காற்றினை சரியான அளவில் நிரப்பவும்.(முன் பக்கம் - 20, பின் பக்கம் - 30, காரணம் 25,35 எனில் டயருக்கு எதுவும் ஆகாது. ஆனால் முதுகுத்தண்டில் வலி வரும்.)
Air pressure for two wheeler – front – 20, back – 30 (with pillion also). When you ride with more than this, it will not affect the tyre.  It will affect our spinal cord .

3. 1500 கி.மி மேல் ஒருமுறை ஆயில் மாற்றவும். (மிக அதிக அளவு - 2000 கி.மி)
Change the oil for every 1500 K.M(Max – 2000 K.M)

4. 5000 கி.மிக்கு ஒருமுறை ஆயில் பில்டரை சுத்தப் படுத்தவும்.
Clean the oil filter for every 5000 K.M

5. ப்ரேக் சரி இல்லாமல் வாகனத்தை இயக்காதீர்கள்.
Do not ride your vehicle without break.

6. சிக்னல் மிக அருகினில் சென்று ப்ரேக் செய்யாதீர்கள். எரிபொருள் நஷ்டம் ஏற்படும்.
Do not ride your vehicle with high speed and stop near the signal. This will make energy/fuel loss.

7. குறிப்பிட்ட வேகத்தில் எல்லா நேரங்களிலும் இயக்கவும். (.ம் - எல்லா நேரங்களிலும் - 50 கி.மி)
Ride your vehicle with constant speed at all times (Ex. 50 K.M)

8. எரிபொருளை விடுமுறை நாட்களின் இறுதியில் நிரப்பிவிடவும்.
Fill the fuel during the week ends/holidays.

9. முடிந்தவரை மற்றவர்களுக்கு வாகனத்தை கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
Kindly avoid to give your vehicle to your friends.

10. வாகனத்திற்கான அனைத்து நகல்களையும் எப்போதும வாகனத்தில் வைத்திருங்கள்.
Keep all your photo copy of your documents (RC book, insurance, driving license and pollution certificate etc.,)

11. எப்பொழுதும் ஹெல்மெட் அணிந்து செல்லவும்.
Always wear helmet. (Rule or not)

10. அதை மிகவும் உரிமையான நண்பனாக நேசியுங்கள்.
Treat your vehicle as your friend.


Wednesday, August 21, 2013

2038 - மின்னணு மூலம் விற்பனை

மின்னணு மூலம் விற்பனை -    e- sale  

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1. நட்சத்திர ஆமைகள் மற்றும் நாய்கள் விற்பனைக்கு.

2. சார், என் பொண்டாட்டிய விக்க முடியுமா சார்?

3. வயதானவர்களை இடம் மாற்றி விற்க, இங்கே அணுகவும். 50 முதல் 60 வயதான பெண்களுக்கு முன்னுரிமை அளித்து விற்றுத்தருகிறோம்.

4. புளுட்டோ கிரகத்தில் இடம் விற்பனைக்கு.

5. வெங்காயம் என்ற சொல்லுக்கு, நாங்கள் காப்புரிமை பெற்றிருக்கிறோம். அதை நீங்கள் 10 முறை பயன்படுத்த எங்களிடம் அணுகவும். 

Wednesday, August 14, 2013

2038 - இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்


இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.



1.
அப்பா ரோபோ : என்னடா, 100 மில்லியன் pages ஒரு செகன்ட படிக்கிற. 2*2 = 4ன்னு தெரியாதா?

2.
 ரோபோ  1 : என்ன ட்ராபிக்டா இது. இதுக்கு முதல்ல ஒரு ப்ரொக்ராம் எழுதனும்.

3.
காதலித்த பெண் கைவிட்டதால் ஆண் ரோபோ தற்கொலை.

4.
  ரோபோ  gen xyz - எங்க வீட்ட ஒரு பழைய மாடல் ரோபோ இருக்கு. 2013 மாடல் சார். அத  mercy killing  பண்ண என்ன procedure?

5.
தொகுப்பாளர்   ரோபோ  - யார் பேசிறீங்க.
மனிதன் :  நான் 1993ல் இருந்து உங்க குரல கேக்கிறேன். நீங்க, 12 May 1994 வியாழக்கிழமை கட்டிகிட்டு வந்த பச்ச கலர் பூப் போட்ட சுடிதாரும் சின்ன பொட்டும் சூப்பர்ங்க. 14 May 1995 ம் தேதி ரிலீஸ்  ஆன மோக முள் படத்திலிருந்து பாட்டு போடுங்க.
ரோபோ X : மனுஷங்க data  பாத்து மயக்கம் போட்டுடுத்து சார்.

6.
  ரோபோ 1 : நமக்காவது டெய்லி 50 யூனிட் கரண்ட் வேணும். அவனுக்கு 1யூனிட் போதும். அவன் ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறான்.

7
  ரோபோ 1 : ஏன்டா ஓடிவர?

  ரோபோ 2 : என் பொண்டாட்டி ரொம்ப கொடும காரியா இருக்காடா. டெய்லி 1 யூனிட் கரண்ட் கூட குடுக்க மாட்டேங்கிறாடா?

Saturday, August 3, 2013

ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு

தமிழ் மாதம் ஆடியில் வரும் 18ம் தேதி ஆடிப் பெருக்கு.

வீட்டில் வயதானவர்களுடன்(பெரும் பாலும் - பாட்டி) ஒரு குட்டிக் குழந்தைகள் அவர்கள் உலகங்களுடன் செல்வார்கள்.

மயிலாடுதுறை - சுடுகாட்டுத்துறை, முங்கில் பாலம்(இப்போது இல்லை) துறை - 2, படித்துறை விஸ்வநாதர் துறை(கூட்டம் குறைவுதான்), மற்றும் லாகடம்.

காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இது நிகழும்.

டேய் பசங்களா, கொஞ்சம் ஆட்டம் போடாதீங்கடா, தண்ணீ கலங்கிடும்( அப்பவே 2 ஆள் ஆழத்துக்கு தண்ணி)

நீங்க வேணும்ணா வேற துறைக்கு போய் சாமி கும்பிடுங்க .

எப்படியா இருந்தாலும் வீட்டுக்குத்தான வருவ, அப்ப பேசிக்கிறேன்.

கடந்த வருடத்தில் திருமணமான தம்பதியரின் மாலைகள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி வைக்கப் பட்டிருக்கும். அதை வயதானவர்கள் ஆற்றில் விட எடுத்து வருவார்கள்

டேய், பசங்களா, இந்த மாலை எல்லாம் நடு ஆத்துல விடுங்கடா பாப்போம். - பாட்டிகள்,
'ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்' -  இது கூட்டம்.

படைக்கப்பட இருக்கும் பொருளில் ஒரு மஞ்சள் கயிரு இருக்கும்.
'டேய் கயரு கட்டிக்க வாங்கடா'
கடைசியாக வரேன், (யார் அதிக நேரம் நீரில் இருப்பவர்களே வென்றவர்கள்)

டேய் கம்னேட்டி(நான் அறிந்த வரையில் இது கும்பகோணம் மற்றும் அவை சார்ந்த பகுதி மக்கள் திட்டும் பாஷை) சீக்கிரம் கரை ஏறுடா, தலையில தண்ணி கொட்டுது.

அப்போதுதான் சப்பரம் ஞாபகம் வரும். (சிறிய வடிவ தேர். உள்ளே சாமி படம் ஒட்டப் பட்டிருக்கும்). அலங்காரம் முடிந்து அது வீடு வரையில் இழுத்து வரப் படும். கூடவே நண்பர்கள் கூட்டம்.

கலர் அன்னங்கள் - படையல் வீட்டில், மறுபடியும் விளையாட்டு தொடரும் - இது வீதிகளில்.

காவிரியினில் நீர் உண்டோ இல்லையோ, நினைவுகளில்....

Friday, August 2, 2013

2038 - கடவுள் மறுப்புக் கொள்கை

1.
நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அதனால் ஏற்கவில்லை என்பதே என் கருத்து.(பெயர் - Saaraavanaakumaar)

2.
தெய்வம் என்பது பொய். (வீடுகளில் பூஜை அறை வீடு மாதிரி இருக்கும்)

3.
எண் கணிதம் என்பது பொய். இந்த காலத்தில இத நம்ப முடியுமா.(கார் நம்பர் 5ன்னு இருக்கணும்.  எல்லா எழுத்தையும்  கூட்டினாலும் 5 வரணும்

4.
நான் அடுத்த வருஷம் அமெரிக்கா போலாம்னு இருக்கேன்.
இந்த தேதி நல்லா இருக்கும் சார்.
என்னா சார் நீங்க, தேய் பிறை சதுர்த்திய நாள் குறிக்கிறீங்க. 6ம் தேதியும், சஷ்டியும் வரமாதிரி குறிச்சி குடுங்க.

5.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கடவுள் மறுப்பு பத்தி எழுதினத்துக்கு 50 பேர் பாராட்டியிருக்காங்க.

Friday, July 19, 2013

அசையா வானவில்

சில பாடல்கள் மழையைத் தூவிச் செல்லும், சில பாடல்கள் வெய்யிலை இறைத்துச் செல்லும்.

சில வானவில்லை விட்டுச் செல்லும்.

அப்படிப்பட்ட பாடல் தான் பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் - எங்கெங்கோ செல்லும்' என்ற பாடல்.

மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல்.

கவிதைக்கான முழுவடிவமும் இப்பாடலில்.

நான் காண்பது உன் கோலமே, அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன் மஞ்சமும்

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்.

ஒரு மழைக்கால ஃபில்டர் காபி போல,
அழகிய பனிக்காலையில் பூத்திருக்கும் பூக்களின் மேல் பனித்துளி போல,
பவழ மல்லியின் வாசம் போல,
கரை புரளும் காவிரி போல,
விழாக் கால இசை வாசிப்புகள் போல,
கவிதையில் வாசிப்பு அனுபவம் போல

எத்தனை சொன்னாலும் அதனுள் பொருந்துவதாக அமையும் இசையும் வரிகளும்.

அசையா வானவில் என்னுள் இன்றும்.

Sunday, July 14, 2013

2038 - போக்குவரத்து

1.
இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.
ஏன்?
பீச்ல இருந்து தாம்பரம் வரைக்கும் வண்டில ஒரு அவர்ல வந்துட்டேன்.

2.
திருவான்மீயூர் - ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கார் 20 டூவீலர் இருக்கிறது by RTO. (தற்போது - 2 கார், 3 டூவீலர்)

3.
வாகன விற்பனை குறைவால் எல்லா வாகனமும் உற்பத்தி 0.25 அவருக்கு  நிறுத்தி வைப்பு.(தற்போது 1 வாரம்)

4.
எல்லாரும் 10000 ரூ நோட்டா கொடுத்தா என்ன செய்யறது. ரூ 1000மா கொடுங்க.

5.
உங்க வண்டிய 125வது மாடியில பார்க் பண்ணுங்க, ஒரு நிமிஷத்திற்கு ரூ. 100/-

Monday, July 1, 2013

2038- ரியல் எஸ்டேட்

1.
சென்னைக்கு மிக அருகில் சுமார் 700 கி.மி (கன்யா குமரியில் இருந்து 10 கி.மி தூரத்தில்) இடம் விற்பனைக்கு

2.
எங்களிடம் திண்டிவனத்திற்கு அருகில் 100 பிளாட் வாங்குபவர்களுக்கு, 1கிராம் தங்கம் இலவசம்.

3.
எங்களிடம் இன்றே அடுக்கு மாடி குடியிருப்புகள் புக் செய்யுங்கள். சரியாக 2063ல் உங்களிடம் வீடு ஒப்படைக்கப்படும்.

4.
இங்க பாருங்க, இது எங்க நாய் கட்டி வைக்கும் இடம். அடுத்த நாய் வாங்குற வரைக்கும் அத வாடகைக்கு விடறோம். வாடகை - 1,00,000/- 100 மாசம் அட்வான்ஸ். புடிக்கலன்னா சொல்லிடுங்க, அடுத்த பார்டி வெயிட்டிங்.

5.
எங்களிடம் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு முதல் மாதம் தினமும் 1லி தண்ணீர் இலவசம்.

Wednesday, June 19, 2013

2038 - ஊடகம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.


1.
ரஜினி முதன் முதலில் குடித்த சிகிரெட் - எங்களது புத்தகத்தில் மட்டும்.

2.
இன்றைய நிலவரம்
தங்கம் விலை
வெள்ளி விலை
பெட்ரோல் விலை
டீசல் விலை
கற்பழிப்புகள்
கொலை - 9632871(சென்னை மட்டும். சிறுவர்கள் கணக்கில் சேர்க்கப் படவில்லை).
நீக்கப் பட்ட அமைச்சர்கள் - 3
சேர்க்கப் பட்ட அமைச்சர்கள் - 51

3.
பெட்ரோல் வரலாறு காணா விலை ஏற்றம் - 0.01 பைசா. பெட்ரோல் பங்குகளில் அடிதடி. 100 பேர் சாவு.

4.
உலக அழகி கர்ப்பம். வியாபாரம் நஷ்டம் 1000 கோடி.(தற்போது 50 கோடி)

5.
இங்கு வெளியாகி இருக்கும் கூப்பனை வெட்டி வந்து எங்களிடம் கொடுத்தால், ஒன்றுக்கு ஒன்று கார் ஃப்ரி(நீங்கள் விரும்பும் மாடல்).

Monday, June 17, 2013

2038 - மருத்துவம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
சார், லைன்ல வாங்க சார். நாங்களும் எங்க சொந்தக்காரன்களை 'கருணைக் கொலை' செய்யத்தான் நிக்கிறோம். எங்க டோக்கன் நம்பர் - 9876231. எப்படியும் கிடைச்சிடும். கவலைப்படாதீங்க.

உங்களுக்கு மாமியார், எனக்கு என் பொண்டாட்டி சார்.


2.
சார், மேடம் இங்க பாருங்க, இந்த இதயத்தை வாங்குங்க சார். லைப் டைம் வாரண்டி சார் - கடைகளில்.

3.
அதிசயம். டாக்டர்கள் சாதனை. கருவில் இருக்கும் 3 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.

4.
இங்கு மனித மூளையின் பதிவுகள் 10 நிமிடத்தில் பிரதி எடுத்துத் தரப்படும்.

5.
Hi, This is XXX , we want sperm donors. Because my husband have zero sperm count. He candidate should be Master degree graduate from I** and height – 5ft 9 inch, body weight 72kg. You will receive one time payment of Rs. 99 Lacs

Friday, June 14, 2013

2038 - சமூகம்

2038  - சமூகம்
1.
என்னப்பா, உனக்கு குழந்தை பிறக்க போவுதாமே, அதுக்கு முனைவர் பட்டம் படிக்கிறத்துக்கு பணம் கட்டி வச்சிட்டியா?

2.
சார் பின்னால வாங்க சார். அப்ளிகேஷன் வாங்க நான் போன வருஷத்திலிருந்து நிக்கிறேன். குறுக்க வராதிங்க சார்.

3.
எங்க பள்ளில PRE K.G ரொம்ப ஈசியா இடம் கிடைச்சிடும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான். உங்க பேர்ல தி. நிகர்ல இருக்கிற 10 கிரவுண்ட நிலத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க.

4.
ஏங்க, இப்பவாது பொண்டாட்டி பேச்சை கேளுங்க. அடுத்த வருஷம் நமக்கு குழந்தை பிறந்திடும். இப்ப பணத்தை பேங்கல போட்டாதான் அவன் 58 வயசுக்கு அது கிடைக்கும்.

5.
6மாத குழந்தை. என்ன அந்த ஸ்கூல போடாத. நல்ல ஸ்கூல போடு.

தந்தி சேவை

தந்தி சேவை வரும் ஜூலை மாதத்தோடு நிறுத்தப்பட இருக்கிறது.

பெரும்பாலும் தந்தி என்பது துக்க செய்தி என்பது மூத்த தலைமுறை கருத்து. என் வரையில் அது நினைவுகள்.

அப்பா R.D.O வாக கடலூரில் வேலை பார்த்து வந்தார்கள். நான் அப்போது திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தேன்.

கடலூரில் இருந்து அப்பா தந்தி அனுப்பி இருந்தார். Start immediately .

'யார் வயதானவர்கள்'?

'மவுத் வாங்குற லிஸ்ட்ல யாரு இருக்கா'?

'யாருக்கு என்ன பிரச்சனை'?

'விடியுமா' - கு.பா.ர கதையை விட பல எண்ணங்கள்.

'டேய், வண்டிய சீக்கிரம் ஓட்டுங்கடா'. அப்போ Only N.H.2. No N.H.4.

'கடவுளே என்ன வேதனை இது'

கடலூர் மஞ்ச குப்பம் அருகினில் பஸ். 'சீக்கிரம் போங்கடா'

வேகமாக வீடு நோக்கி ஒட்டம். உண்மை. நடக்கவில்லை.

வீட்டில் அம்மா, அப்பா.

'என்ன ஆச்சு. எதுக்கு தந்தி அடிச்சிங்க'

'அது ஒன்னும் இல்ல. நீ ரஜினி ரசிகன் தானே. ரிசர்வேஷன் இல்ல இல்லியா, அதனால பாட்ஷா படத்துக்கு டிக்கட் சொல்லி வச்சிருக்கிறேன்'

Image – Internet 

Thursday, June 13, 2013

2038 - பிரபஞ்சம்

2038 - பிரபஞ்சம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
கடவுள் துகள் பற்றிய பெரும்பான்மையான முடிவுகள் தெரிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது என்று கூறுவார்கள்(சுஜாதா பாணியில் - உட்டாலங்கடி).

2.
நாங்க புளுட்டோவுல பிளாட் போடறோம் சார். போக வர இலவச வசதி.

3.
இந்த வாரம் -  நிலவில் ஓபன் தியேட்டரில் - தலைவா.

4.
இது உங்க தாத்தா, பூமியில இருந்த போது கட்டிய வீட்ல இருந்து எடுக்கப் பட்ட செங்கல்லுடா. பத்ரமா வச்சிக்கடா.

5. உங்க தாத்தா காலத்துல அண்டத்தின் அகலம் 2500 மில்லியன் ஓளி ஆண்டுன்னு கண்டுபிடித்திருந்தார்கள். இப்ப எவ்வளவு தெரியுமா - 10000 மில்லியன் ஓளி ஆண்டுகள்.

Tuesday, June 4, 2013

2038 - சினிமா

2038-சினிமா

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
(நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)

சினிமா
-------
1.
சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும்.
இப்ப மினிமம் பட்ஜெட்னா ஆயிரம் கோடிதான்.
2.
கமலின் அடுத்த படைப்பு, சதாவதாரம். 2008ல் தசாவதரம் எடுத்தார். தற்போது  சதாவதாரம். 100 முக்கிய வேடங்களில்.
3.
பிரசன்னா ஸ்னேகா - பிரிவுக்குக் காரணம் என்ன?
பிரசன்னா ஸ்னேகா மகன் மற்றும் மகள் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து ஊருக்கு சென்றார்கள். ஸ்னேகா அவர்களுடன் சென்றுள்ளார். பிரிவு ஏற்படாமல் இருக்க எங்களிடம் மொபைல் வாங்குங்கள்.

Thursday, May 30, 2013

2038

2038

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
(நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)


பல் வேறு தலைப்புகளில் எழுத உள்ளேன். சில தலைப்புகள்.




இலக்கியம்
சினிமா
சமூகம்
வாழ்க்கை
அறிவியல்
பொருளாதாரம்

இலக்கியம்
------------------
இந்த வருடத்திற்கான இலக்கிய பாடல்.

எனக்கு கண்வலி ஏன் தெரியுமா?
கண்ணே
உன் ரோஜா பார்வை பட்டதால்.

மேற்கண்ட கவிதை ரூ.1,00,000/-. பரிசு பெறுகிறது.

சினிமா
-----------
தலைவர் ரஜினியின் மற்றும் ஒரு மகுடம். கல்லூரிக் காலங்கள்.  பழம் பெரும் நடிகை லக்ஷ்மி மேனனின் மகள் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

சமூகம்
-----------
பூட்டிய வீட்டினில் 1 லி. தண்ணீர் திருட்டு.

வாழ்க்கை
---------------
அரிஷ்டநேமி, நீ ஏன் எப்ப பாத்தாலும் பசி பட்னின்னு கவித எழுதுற.
இதுக்கு 5623  like

இது சும்மா சாம்பிள் தாம்மா. மெயின் பிச்சர் பாரு.

Sunday, May 19, 2013

கெட்டிச்சட்னி



பொ. கடலை,
உப்பு,
கா. மிளகாய்,
தேங்காய் துருவல்.
கடுகு/வெ.உ.பருப்பு - தாளித்தது

பொ. கடலையை மிக்சியில் நன்கு அறைத்துக் கொள்ளவும்.
பிறகு  உப்பு,கா. மிளகாய்,தேங்காய் துருவல் இவைகளை சிறிது நீர் விட்டு அறைக்கவும்.

பொ. கடலை இரண்டு பங்கும்,தேங்காய் துருவல் ஒரு பங்கும் இருத்தல் நலம்.

கடுகு/வெ.உ.பருப்பு - தாளித்தை அதனுடன் சேர்க்கவும்.

கெட்டிச்சட்னி ரெடி.

நான் ரசித்த இடம் - ராயர் மெஸ் - மயிலை.
படத்தில் இருப்பது நான் செய்தது.

நாங்களும் செய்வோமில்ல .

Friday, May 3, 2013

சருகின் சலனம்


எனது பள்ளி விடுமுறை நாளுக்கு தாத்தா-பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.

'டேய்' - அம்மா

'ம்'- நான்

'சினிமாவுக்கு போலாமா'-அம்மா

'ம்'- நான்

'போய் தாத்தாகிட்ட கேளு' -அம்மா

'தாத்தா,சினிமாவுக்கு போவட்டுமா' - நான்

'பத்திரமா போய்ட்டு வாங்க' - தாத்தா.

மணி 6 நெருங்கிக் கொண்டிருந்தது.

'சீக்கிரம் கிளம்புமா'

'இருடா, மாவு அறைச்சிட்டு வந்திடுறேன்'

'சீக்கிரம் சீக்கிரம் '

ஊருக்கு வெளியே 2 கி.மி-ல் தியேட்டர். தொலை தூரத்தில் பாடல்.
'மருத மலை மாமணியே'--

'டேய், சீக்கிரம் வாடா, மருத மலை பாட்டு போட்டுட்டான், டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சிட்டான்'.

கூட்டம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்.
இறை உணர்வோடு தொழில் தொடக்கம். அதே சமயம் மற்றவர்களுக்கு ஓரு  Communication method.

நினைவுகளோடு மூழ்கி TV பார்க்க ஆரம்பித்தேன்.
'மருத மலை மாமணியே  - பாடல்'

'பழைய பாட்டை நிறுத்தி தொலைங்க, சகிக்கல' - மகன்.

காலம் மாற்றத்தில் உதிராத சருகுகள் எவை.

Tuesday, April 30, 2013

அட்சய திருதியை



மீண்டும் ஓரு வியாபாரத்திற்கு தயாராகி விட்டோம்.

அனைவரும் வியாபார உத்திகளை மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நள்ளிரவு 12 மணி முதல் வியாபாரம்.

அனைத்து நிகழ்வுகளும் கலியில் மாற்றப்படும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

வைகாசி மாதம் அம்மாவாசைக்கு பிறகான மூன்றாவது நாள் - திருதியை.
அன்று தொடங்கப்படும் காரியங்கள் விருத்தி அடையும். (உ.ம் தானம், தருமம்,பசுவிற்கு உணவிடுதல்)

(தானம் - தனக்கு சமமானவர்களுக்கு கொடுப்பது,தருமம் - தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பது. )

வாசலில் வரிசையில் நிற்பது, கடன் வாங்கி நகை வாங்குவது அனைத்தையும் விட்டொழியுங்கள்.

வாருங்கள், வாழ்க்கை வாழ்தலில் இல்லை. உண்மையை உணர்தலில் இருக்கிறது.



Saturday, April 6, 2013

எங்கே எதிர்காலம்?


நண்பன் ஒருவனை சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டில் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது.

தொகுப்பாளர் ஊர் ஊராக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

தொகுப்பாளர் : இராவணன் தவறு செய்வதாக சொல்லி அவனிடம் இருந்து விலகி வந்த தம்பியின் பெயர் என்ன?
பதில் : ...
தொகுப்பாளர் : விஜய் சினிமா துறைக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. அவர் நடித்த முதல் படம் எது?
பதில் : நாளைய தீர்ப்பு.
தொகுப்பாளர் :  மிக அருமையான பதில்
பார்வையாளர்கள் மத்தியில் மிக்க சந்தோஷம்.

கண்ணிர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம்

Saturday, March 23, 2013

ஒலிக் குறிப்புகள்


மெட்டி ஒலி என் நெஞ்சை காதொடு தாலாட்ட ..


மூன்று பெண்கள் பேசிக் கொண்டே நடக்க துவங்குகிறார்கள். மெல்லியதாய் humming  ஆரம்பிக்கிறது. இந்த humming விஷயங்கள் தற்கால படங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. (உ.ம் - திருமலை - அழகூரில் )

மிக சாதரண நடுத்தர வர்க்கத்தின் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைவீசி நடத்தல், குடத்தில் முகம் பார்த்தல், விரும்பி சுவைக்கும் கடலையில் வீணானதை துப்புதல்.

சொல்ல முடியா சுகம் கொண்டிருக்கும் இறந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

மறந்து போன பழைய தலைமுறையின் சந்தோஷங்களை மீட்டுக் கொண்டுவருகிறது.

காலம் எல்லா காயங்களையும் ஆற்றி விடும் ஆற்றல் உடையது. இசை அதனினும் ஆற்றல் உடையதாய் இருக்கிறது.

Saturday, March 9, 2013

விளம்பரம்


மிகப் பெரிய குளிர் பான நிறுவனத்தின் விளம்பரம்.

வயலின் கற்றுக் கொண்டிருக்கிறான் ஒருவன். இருவர் வருகிறார்கள். நன்றாக வாசிக்கிறார்கள். ஆசிரியை வருகிறார். இருவரையும் நன்றாக வாசிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி விடுகிறார். வயலின் கற்றுக் கொண்டிருப்பனை தன்னுடன் இருக்குமாறு கூறுகிறார்.

அவன் சந்தோஷமாக தலையட்டுகிறான்.
அருவெறுப்பின் உச்ச கட்டம்.

இதற்கு யாரும் மாற்று கருத்து தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.




மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆச்சார்ய தேவோ பவ;

காலம் நம்மைக் காக்கட்டும்.

Tuesday, March 5, 2013

சொர்க்கம்


சமீபத்தில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். வாசலில் நுழையும் போது இசைக் கச்சேரி. வேண்டாம் மச்சான் வேண்டாம்  இந்த .. என்ற பாடல். மிகப் பெரும்பாலான மனிதர்கள் ரசித்தார்கள். (வேறு என்ன சொல்ல)


திருமண தம்பதியருக்கு அன்பளிப்பு அளிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம்.  ஒரு புறம் ஏறி, மற்றொரு புறம் இறங்க வேண்டும். தீடிரென இரண்டு பேர் எதிர் முனையில் ஏறி, அன்பளிப்பு கொடுத்து விட்டு இறங்கி விட்டனர்.சினிமா அரங்கமா என சந்தேகம் வந்து விட்டது.

உணவு அரங்கத்தில் மீண்டும் கூட்டம். பந்தி ஆரம்பித்து சாம்பார் தான் சாப்பிடுகிறார்கள். அதற்கும் சரவண பவனில் சீட்டு வைத்து காத்திருப்பது போல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் காத்திருக்கும் கூட்டம்.

இந்த அக்கினி நம்மை காக்கட்டும் என்று தொடரும் மந்திரங்கள் எங்கே போயின.

திருமணங்கள் சந்தோஷ தருணங்கள். ஆனால் எது சந்தோஷ தருணங்கள் என்பதில் சந்தேகம்.