Sunday, March 9, 2014

நகர மறுக்கும் நினைவுகள் – 6 - உன் கண்ணில் நீர் வழிந்தால்..

படம் :வியட்நாம் வீடு

இன்றைக்கு இருப்பது போல் மிகப் பெரிய காட்சி அமைப்புகள் இல்லாமல் கவிதையும் இசை சார்ந்த வடிவங்களும் கொண்ட ஒரு பாடல்.

ஒரு நிஜமான கணவன் மனைவியின் வாழ்வுகள் பதிவு செய்யப்பட்ட பாடல். பாரதியின் சாயலில் கண்ணம்மா என்று அழைத்தலும் உண்டு.

மிகவும் கைத் தேர்ந்த மருத்துவரின் கத்தி நோயாளின் காயத்தை சுற்றி அறுப்பது போல், இசையின் முன்னறிவிப்பு இன்றி TMSன் குரலில் பாடல் ஆரம்பம் ஆகிறது.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..

தலைவனின் நிலை கண்டு கலங்குகிறாள் தலைவி. மண் நோக்கிய அழுகை. (தலைவன் கண்டு விடுவானோ என்ன? ).

திருமண நிகழ்வு தொடங்குகிறது. அக்னி வலம் வருதல் தொடர்கிறது.
வார்த்தகளின் ஆரம்பங்களில் நிகழ்காலம்.

தலைவன் அமர்ந்திருக்கிறான். தலைவி அவன் காலடியில்.

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி

தலைவி கண்ணில் மகிழ்வுடன் கூடிய கண்ணீர். (நவ ரசங்களையும் காட்டிய நாயகி அல்லவா)

பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி

கம்பீரத்துடன் கூடிய தலையாட்டல் (ஒரு சூரியன், ஒரு சிவாஜி)
தலைவியின் அழுகையினை துண்டால் துடைத்து விடுகிறான்.

மரமும் அதன் வேர்களாக குழந்தைகளும். கண நேரத்தில் வேர்கள் மறைகின்றன. மாபெரும் வலியினை உள் வாங்கி தலைவன். நிலை குலைந்து விழுகிறான் தலைவன். தாங்கிப் பிடிக்கிறாள் தலைவி.

தலைவனும் தலைவியும் ஊஞ்சலில்.

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்.

பார்வை அற்றவர்களின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் காட்சிகளும், பாடல் வரிகளும்.

காட்சி மாறுகிறது.
தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள். காட்சி மாறுகிறது.
காலம் மாறி இருக்கிறது. தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள்.

முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

தலையை நிமிர்ந்து பார்க்கிறான் தலைவன்.

என் தேவையை யார் அறிவார்

வினாக்குறி தலைவி கண்களில்.

என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்

தலைவி தலைவனின் கைகளை கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் வரையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவருக்கும் போட்டி இல்லை. இப்பாடலே அப்படம் முழுவதையும் காட்டி விடுகிறது.


காலம் கடந்து கணவன் மனைவி அன்னியோனத்தை காட்டும் மிக அழகான பாடல்

இன்னமும் நீர் வழிந்து கொண்டிருப்பதே பாடலின் வெற்றிக்கு சாட்சி.

No comments:

Post a Comment